குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
குறிஞ்சிப்பாட்டு

பாடியவர்:- கபிலர்
திணை:- குறிஞ்சித் திணை
துறை:- அறத்தொடு நிற்றல்
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 261
உரை:- முனைவர் செங்கைப்பொதுவன்
சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்
சங்கத்தமிழ்
குறிஞ்சிப்பாட்டு

பாடியவர்:- கபிலர்
திணை:- குறிஞ்சித் திணை
துறை:- அறத்தொடு நிற்றல்
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 261
உரை:- முனைவர் செங்கைப்பொதுவன்
புலவர் கபிலர், பிரகத்தன் என்ற ஆரிய மன்னனுக்கு, தமிழரின் களவு ஒழுக்கத்தைப் பற்றியும் கற்பு ஒழுக்கத்தைப் பற்றியும் விவரிக்கும் பாட்டு குறிஞ்சிப்பாட்டு. குறிஞ்சிப்பாட்டு என்ற பெயர் குறிஞ்சித் திணையைப் பற்றிய பாடல். குறிஞ்சி என்பது புணர்தலை உரிப்பொருளாகக் கொண்ட திணை. நச்சினார்க்கினியர் கூற்று, “இதற்குக் குறிஞ்சி என்று பெயர் கூறினார். இயற்கைப் புணர்ச்சியும் பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறுதலின், அன்றியும் முதலானும் கருவாலும் குறிஞ்சிக்கு உரியயாகவே கூறுதலானும் அப்பெயர் கூறினார்”.
இந்தப் பாடல் தோழி செவிலியிடம் கூறும் கூற்றாக அமைந்துள்ளது.
அகத்திணையில் களவு ஒழுக்கம், கற்பு ஒழுக்கம் என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. இவ்விரண்டையும் இணைத்து நிற்பது அறத்தொடு நிற்றலாகும். தலைவியின் களவு ஒழுக்கத்தை வெளிப்படுத்துதல் அறத்தொடு நிற்றல் ஆகும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகியவர்கள் அறத்தொடு நிற்பதுண்டு. அறத்தொடு நிற்றலின் விளைவு, தலைவியை அவள் விரும்பிய தலைவனுடன் கற்பு வாழ்க்கையில் இணைப்பதாகும். தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்வித்தல் ஆகும்.
- 01. தோழி செவிலியை அணுகி வேண்டுதல் (1-8)
- 02. தோழியின் சொல் வன்மை (9-12)
- 03. அறம் உரைக்கும் தலைவியின் ஆற்றொணாத் துன்பம் (13-26)
- 04. தன்னிலை கூறும் தோழி (27-29)
- 05. தலைவியின் மனம் கூறும் தோழி (30-34)
- 06. தலைவனோடு தலைவிக்கு ஏற்பட்ட தொடர்பின் தொடக்கம் தினைப்புனம் காவல் (35-39)
- 07. பறவை ஓட்டும் பாவையர் (40-45)
- 08. மழை பொழிந்த நண்பகல் நேரம் (46-53)
- 09. அருவியில் ஆடிய அரிவையர் (54-61)
- 10. பாறையில் மலர் குவித்த பாவையர் (61-98)
- 11. மர நிழலில் தங்கிய மங்கையர் (99-106)
- 12. தலைவனின் எழில் (107-127)
- 13. வந்தன நாய்கள் (128-134)
- 14. நாய்களை அடக்கிக் கெடுதி வினவிய தலைவன் (135-142)
- 15. தலைவியின் சொல்லை எதிர்பார்த்து நின்றான் தலைவன் (142-152)
- 16. காவலன் எய்திய அம்பினால் சினமடைந்த யானை (153-169)
- 17. யானை மீது அம்பைச் செலுத்தினான் தலைவன் (169-183)
- 18. தலைவி தலைவனோடு கூடல் (183-195)
- 19. தலைவன் நாட்டின் சிறப்பு (196-199)
- 20. இல்லறம் நாடினான் இனியவன் (200-208)
- 21. ஆணை தந்து ஆற்றுவித்தான் தலைவன் (208-216)
- 22. வந்தது மாலைக் காலம்! (217-230)
- 23. மன்றலில் மணப்பேன் என்று கூறிப் பிரிதல் (231-237)
- 24. தலைவன் வரும் வழியின் அருமை நினைந்து - தலைவி கலங்குதல்! (237-251)
- 25. அவன் வரும் வழி இடர்கள் வாட்டியது இவளை! (251-261)
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்,
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும், . . . .[5]
வேறு பல் உருவில் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று,
எய்யா மையலை, நீயும் வருந்துதி . . . .[1 - 8]
லொலிமென் கூந்தலென் றோழி மேனி
விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ
யகலு ளாங்க ணறியுநர் வினாயும்
பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும் . . . .[05]
வேறுபல் லுருவிற் கடவுட் பேணி
நறையும் விரையு மோச்சியு மலவுற்
றெய்யா மையலை நீயும் வருந்துதி
பொருளுரை:
என் தோழியாகிய தலைவி ஒளிதிகழ் முகம் கொண்டவள். தழைத்த கூந்தலை உடையவள். அவளது மேனியில் இருந்ததால் பெருமை பெற்றிருந்த அணிகலன்கள் இப்போது அவளை நெகிழச் செய்து கொண்டிருக்கின்றன. இது சாகடிக்காமல் சாகடித்துக் கொண்டிருக்கும் கொடிய நோய். இதற்கு என்ன காரணம் என்று தெருவில் உள்ளவர்களை யெல்லாம் கேட்கிறாய். அவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? பல்வேறு உருவங்களில் காட்சி தரும் முருகக் கடவுள்தான் காரணம் என்று தெருவில் உள்ளவர்கள் சொல்லக் கேட்டு முருகனைத் தணிவிக்க அவனுக்கு விழா எடுக்கின்றாய். இனிக்கும் பொருள்களும், மணக்கும் பொருள்களும் படைக்கின்றாய் வேலனைக் கொண்டு இவளை ஓச்சுக்கின்றாய். அதனால் இவள் துன்புறுகிறாள். நீயும் துன்புறுகிறாய். இவளது துன்பத்தைத் தாங்க முடியாமல் நீ பித்தேறி மயங்குகிறாய்.
புள் பி்றர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும், . . . .[10]
உள்கரந்து உறையும் உய்யா அரும் படர்,
செப்பல் வன்மையின் செறித்தியான் கடவலின், . . . .[9 - 12]
புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு . . . .[10]
முட்கரந் துறையு முய்யா வரும்படர்
செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்
பொருளுரை:
இவளது நல்லழகு தொலைந்துபோய் விட்டது. இனிக்கும் தோள்கள் இளைத்து விட்டன. ‘புள்’ என்பது பிறர் அறிந்து கொள்ளக்கூடிய குறிப்புகள். இவளது நிலையைப் பிறர் உணர்ந்து கொண்டனர். அன்றியும் தனிமையே இவளை வருத்துகிறது. அதனால் இவளுக்கு உட்சுரம். இந்த உட்காய்ச்சலோடு இவள் உயிர் வாழ்கிறாள். இவளுக்கு உய்தி தராத பெருந்துன்பம் இது. இவளால் அதனை வெளிப்படுத்த முடியவில்லை. நான் அவளை வற்புறுத்திக் கேட்டேன். அவள் என்னிடம் சொன்னாள் தலைவி தோழியிடம் சொன்னாள்.
நேர்வருங் குரைய கலங்கெடின் புணரும்,
சால்பும், வியப்பும், இயல்பும் குன்றின், . . . .[15]
மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்,
மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி, . . . .[20]
இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென
நாம் அறி உறாலின் பழியும் உண்டோ?
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென”,
மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று, . . . .[25]
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும் . . . .[13 - 26]
நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ்
சால்பும் வியப்பு மியல்புங் குன்றின் . . . .[15]
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த
லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை
யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர்
மாதரு மடனு மோராங்குத் தணப்ப
நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி . . . .[20]
யிருவே மாய்ந்த மன்ற லிதுவென
நாமறி வுறாலிற் பழியு முண்டோ
வாற்றின் வாரா ராயினு மாற்ற
வேனையுல கத்து மியைவதா னமக்கென
மானமர் நோக்கங் கலங்கிக் கையற் . . . .[25]
றானாச் சிறுமைய ளிவளுந் தேம்பு
பொருளுரை:
முத்து, மணி, பொன் போன்றவற்றாலான அணிகலன்களை இழக்கலாம். தேடி ஈட்டினால் அவை மீண்டும் வந்து சேர்ந்துவிடும். சான்றாண்மை ஒழுக்கம், பிறர் வியக்கத்தக்க பெருமை, நல்லியல்பு ஆகியவை, குன்றிப்போனால் அவற்றை மீண்டும் தூக்கிப் புகழ்நிலையில் நிறுத்துதல் யாராலும் முடியாத பண்புகள். குற்றமற்ற மெய்யறிவுடைய ஐயர்க்கும் அது எளிதன்று என்று தொன்னெறி உணர்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர். அதனால்…
தலைவி சொல்கிறாள் - ஆசையும், அறியாமையும் என்னிடம் ஓராங்கு காட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றன. என் தந்தை தேர்ப்படைத் தலைவன். அவனது கட்டுக் காவலை மீறி என்னவனும், நானுமாக மயங்கிய நிலையில் எங்களுக்குள் நிகழ்ந்த உடல் சார்ந்த உறவு இதுதான். இதைத் தாய்மாரிடம் சொல்லிவிட்டால் பழியும் உண்டோ – என்று தலைவி தன் தோழியிடம் சொன்னாள். அவள் சொன்னாள் என்று இப்போது தோழி தாயரிடம் கூறுகிறாள்.
பாடலில் வரும் ‘ஓராங்கு தணப்ப’ என்பதன் விளக்கக் கண்ணோட்டம். ‘ஓராங்கு’ என்பது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. தரையில் கட்டம் போடுவர். ஐந்து பேர் விளையாடும் ஆட்டம் இந்த ஓராங்கு. நான்கு மூலைகளிலும் நான்கு பேர். ஏதோ ஒரு உத்தியைக் கையாண்டு பட்டவர் ஒருவரைக் கண்டறிவர். பட்டவர் கட்டத்திற்கு நடுவில் வந்துவிடுவார். காலியாக உள்ள மூலைக்குப் பிறர் ஓடுவர். இரண்டு பேர் ஒரே மூலையில் நிற்கக்கூடாது. அடுத்த மூலையை அடைவதற்கு முன் பட்டவர் ஓடுபவரைத் தொடவேண்டும். தொடப்பட்டவர் பட்டவர் ஆகி ஆட்டம் தொடரும். காலியாக உள்ள இடத்தை நிரப்புவதே ஓராங்கு ஆட்டம். பெண்மைத்தன்மையும் அறியாமையும் ஓருமுகமாக நின்று எங்களிடமிருந்து விலகிவிட்டன. அதனால் வெளியிடத்துக்கு நாங்கள் சென்றோம். மன்றலாகிய உடல் சார்ந்த உறவு நிகழ்ந்துவிட்டது.
ஊர் அறிய நடக்கும் திருமணம் அறமணம். இங்கு நடந்தது மறைமணம். இந்தப் புறவுலகத்துக்கு இது பொருந்தாவிட்டாலும் அந்த அகவுலகத்துக்கு பொருந்தும். வானோர் வாழ்த்துவர். தோழி தொடர்கிறாள். இப்படி அவள் (தலைவி) சொல்லும்போது மான் விரும்பும் அவளது மயக்கப் பார்வை கலங்கி விட்டது. வேறு வழி தெரியாமல் கையைப் பிணைந்துகொண்டாள். தாங்க முடியாத துன்பத்தோடு தேம்பித் தேம்பிச் சொன்னாள்.
வினை இடை நின்ற சான்றோர் போல,
இரு பேர் அச்சமோடியானும் ஆற்றலேன் . . . .[27 - 29]
வினையிடை நின்ற சான்றோர் போல
விருபே ரச்சமோ டியானு மாற்றலேன்
பொருளுரை:
இரு பெரு வேந்தர்கள் தங்களுக்குள் இருந்த கருத்து மாறுபாட்டினால் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்க்க நினைத்த சான்றோர் போர்க்களத்துக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறும்போது எத்தகைய அச்சத்துடன் இருப்பாரோ அத்தகைய அச்சத்துடன் இருந்துகொண்டு என் உள்ளம் தாங்கிக்கொள்ள முடியாத உண்மையை உங்களிடம் (தாயரிடம்) சொல்கிறேன். – என்கிறாள் தோழி.
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது,
எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல், ஆன்றிசின், சினவாதீமோ! . . . .[30 - 34]
வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா
தெமியேந் துணிந்த வேமஞ்சா லருவினை
நிகழ்ந்த வண்ண நீநனி யுணரச்
செப்ப லான்றிசிற் சினவா தீமோ
பொருளுரை:
உயர்ந்த பண்பு, ஒத்த குடிப்பிறப்பு, ஒத்த செல்வவளம், ஒத்த குலப்பிறப்பு, உதவும் துணைப்பாங்கு முதலானவற்றை யெல்லாம் பொருத்திப் பார்த்து மணமக்களைக் கூட்டுவிப்பது அக்கால வழக்கம். இவற்றில் எதையும் எண்ணிப் பார்க்காமல் நாங்களாகவே துணிந்து எங்களுடைய பாதுகாப்புக்காக மறைவில் மணம் செய்து கொண்டோம். அந்த மணம் எப்படி நிகழ்ந்தது என்பதை நீ நன்றாக உணருமாறு சொல்கிறேன். தாயே! பொறுத்தருள்க. எங்கள் மேல் சினம் கொள்ளாமல் கேட்டருள்க.
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப,
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்,
நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி
எல் பட வருதியர்” என நீ விடுத்தலின், . . . .[35 - 39]
முத்தார் மருப்பி னிறங்குகை கடுப்பத்
துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குர
னற்கோட் சிறுதினைப் படுபு ளோப்பி
யெற்பட வருதிய ரெனநீ விடுத்தலிற்
பொருளுரை:
யானை விளைந்த மூங்கில் நெல்லைக் கசக்கித் தின்னும். அதன் முத்துப் போன்ற கொம்புகளுக்குக் கீழே அதன் கை தொங்கும். அந்தக் கையைப் போல தினை விளைந்திருந்தது. உவமை நலம்- விளைந்திருக்கும் தினைக்கதிர் யானையின் கைபோல் வளைந்திருக்கும். விளைந்த கதிருக்கு மேல் இரண்டு தினையிலைத் தோகைகள் நிமிர்ந்திருப்பது யானையின் தந்தங்கள் போல் இருக்கும். துதிக்கையிலுள்ள மடிப்புவளைவுகள் போல தினைக்கதிர் திட்டுத் திட்டாகக் காணப்படும். தினைக்கதிர்களை உண்ண வரும் பறவைகளை ஓட்டிக் கொண்டிருந்துவிட்டுப் பகல்பொழுது கழிந்த பின் வீடு திரும்புக – என்று சொல்லி எங்களை நீ அனுப்பி வைத்தாய்.
புலி அஞ்சு இதணம் ஏறி, அவண்,
சாரல் சூரல் தகை பெற வலந்த
தழலும், தட்டையும், குளிறும், பிறவும்,
கிளி கடி மரபின ஊழ் ஊழ் வாங்கி,
உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து, . . . .[40 - 45]
புலியஞ் சிதண மேறி யவண
சாரற் சூரற் றகைபெற வலந்த
தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங்
கிளிகடி மரபின வூழூழ் வாங்கி
யரவுக்கதிர் தெறூஉ முருப்பவி ரமயத்து . . . .[45]
பொருளுரை:
செழுமையான மரத்துண்டுகளைக் கொண்டு பரணிப்பந்தல் போடுபவன் தினைவயலில் பரணிப்பந்தல் அமைத்திருந்தான். மரமேறும் புலிகூட அதில் ஏற அஞ்சும் தகைமையது அந்தப் பரணிப்பந்தல். அதன்மேல் ஏறி இருந்துகொண்டு நாங்கள் கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்தோம். தழல், தட்டை, குளிர் போன்ற இசைக் கருவிகளைத் தட்டி ஒலி எழுப்பி ஓட்டிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்…
நிறை இரும் பெளவம் குறைபட முகந்து கொண்டு
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்,
முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு,
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, . . . .[50]
இன்னிசை முரசின் சுடர்ப் பூண் சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின
மின் மயங்கு கருவிய கல் மிசைப் பொழிந்தென, . . . .[46 - 53]
நிறையிரும் பௌவங் குறைபட முகந்துகொண்
டகலிரு வானத்து வீசுவளி கலாவலின்
முரசதிர்ந் தன்ன வின்குர லேற்றொடு
நிரைசெல னிவப்பிற் கொண்மூ மயங்கி . . . .[50]
யின்னிசை முரசிற் சுடர்ப்பூட் சேஎ
யொன்னார்க் கேந்திய விலங்கிலை யெஃகின்
மின்மயங்கு கருவிய கன்மிசைப் பொழி்ந்தென
பொருளுரை:
அள்ள அள்ளக் குறையாத கடலிலிருந்து மேகமானது நீரை முகந்துகொண்டு காற்றால் உந்தப்பட்டு வானில் மிதந்து அல்லாடிக்கொண்டிருந்தது. வீசிய பெருங்காற்றில் தள்ளாடிய பறவைகள் தம் இருப்பிடங்களுக்குச் சென்றுகொண்டிருந்தன. முரசு அதிர்வது போல் மேகங்கள் இனிமையாக முழங்கின. ஏராளமாகச் சென்ற மேகங்கள் ஒன்றோடொன்று தழுவிக்கொள்ளும்போது, முரசு முழக்கத்துடன் செல்லும் முருகனின் வேல் மின்னுவது போல மின்னல்கள் தோன்றின. அவை மலைமேல் மழையாகப் பொழிந்தன.
அவிர் துகில் புரையும் அவ்வெள் அருவி, . . . .[55]
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடிப்
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி,
நளி படு சிலம்பில் பாயம் பாடிப்
பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்
பின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி, . . . .[60]
உள்ளகம் சிவந்த கண்ணேம்........ . . . .[54 - 61]
ரவிர்துகில் புரையு மவ்வெள் ளருவித் . . . .[55]
தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப்
பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி
நளிபடு சிலம்பிற் பாயம் பாடிப்
பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம்
பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவரி . . . .[60]
யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித
பொருளுரை:
மழைநீர் உச்சிமலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தது. அருவியில் அது இறங்கும்போது விரிந்தாடும் வெள்ளைத்துணி போல் காணப்பட்டது. அந்த அருவியில் நீங்காத ஆசையோடு கட்டுப்பாடின்றி நீராடிக்கொண்டிருந்தோம். பளிங்கு போன்ற அந்தச் சுனையில் மூழ்கு-நீச்சல் போட்டுக் கொண்டிருந்தோம்.
கொட்டும் அருவியில் ஆடினோம். குட்டச் சுனையைக் குடைந்து விளையாடினோம். குளிர்ந்த மலையில் பாயும் நீரிலும் அங்குமிங்கும் பாய்ந்தோடினோம். ஈரம் கோத்துக்கொண்டு பின்னிக்கிடந்த எங்களது கூந்தலில் நீர்த்திவலைகள் சொட்டிக்கொண்டிருந்தன. அவை பொன்னிழையில் பதிக்கப்பட்டுள்ள மணிபோல் எங்களது கூந்தலிலிருந்து தோள்பக்கமாக விழுந்துகொண்டிருந்தன. அவற்றைப் பிழிந்து நாங்கள் உலர்த்திக் கொண்டிருந்தோம்.
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், . . . .[65]
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, . . . .[70]
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், . . . .[75]
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழை, தளவம், முள் தாள் தாமரை . . . .[80]
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம், . . . .[85]
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி, . . . .[90]
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும் . . . .[95]
அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ . . . .[61 - 98]
ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள . . . .[65]
மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா . . . .[70]
விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங் . . . .[75]
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்த
றாழை தளவ முட்டாட் டாமரை . . . .[80]
ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க . . . .[85]
மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகஞ் சிந்து வாரந்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி . . . .[90]
நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி
மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு . . . .[95]
மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்
மாலங் குடைய மலிவன மறுகி
வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப்
பொருளுரை:
பூக்களைப் பறித்துவந்து குவித்து விளையாடுவது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. குவித்த பூக்களைத் தலையில் சூடி ஒப்பனை செய்து கொள்ளுதல், மாலையாகக் கட்டி அணிந்து கொள்ளுதல், தழையோடு கூடிய பூக்களைக் கொண்டு தழையாடை செய்து உடுத்திக் கொள்ளுதல் முதலானவையும் பூ விளையாட்டில் அடங்கும். தழையாடை என்பது உடுத்திக் கொண்டிருக்கும் நூலாடையின் மேல் ஒப்பனைக்காக அணிந்து கொள்ளும் அணியாடை. மழை பெய்து கழுவிய பாறையின்மேல் அவர்கள் குவித்த பூக்கள் இங்கு அகரவரிசையில் அடுக்கித் தரப்படுகின்றன. பூக்களின் எண்ணிக்கை இங்கு 99 என்று எண்ணிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
நுண்ணறிவாளர்களின் எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம். பாடலில் காணப்படும் அடுக்கு-முறை பின்வருமாறு உள்ளது. காந்தள், வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, வேரி, செங் கொடு வேரி, தேமா, மணிச்சிகை, உந்தூழ், உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எறுழம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், வான் பூங் குடசம், எருவை, செருவிளை, கருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, குரவம், பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், காயா, பல் இணர்க் காயா, 70 ஆவிரை, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், பூளை, குரீஇப் பூளை, கண்ணி, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், கோங்கம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, மா, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, முல்லை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நெய்தல், நீள் நறு நெய்தல், தாழை, தளவம், தாமரை, முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், குரலி, சிறுசெங்குரலி, கோடல், கைதை, வழை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, நெய்தல், மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், தணக்கம், பல் பூந் தணக்கம், 85 ஈங்கை, இலவம், கொன்றை, தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, ஆத்தி, அமர் ஆத்தி, அவரை, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பிண்டி, பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், தோன்றி, சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நாகம், நறும் புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி, பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், இருள்நாறி, நள்ளிருள் நாறி, குருந்தம், மா இருங் குருந்தும், வேங்கையும், புழகு, அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,
வள் உயிர் தெள் விளி இடை இடைப் பயிற்றிக் . . . .[100]
கிள்ளை ஓப்பியும், கிளை இதழ் பறியாப்
பை விரி அல்குல் கொய் தழை தைஇப்
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம்
மெல் இரு முச்சிக் கவின் பெறக் கட்டி,
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத் . . . .[105]
தாது படு தண்ணிழல் இருந்தனம் ஆக, . . . .[99 - 106]
வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக் . . . .[100]
கிள்ளை யோப்பியுங் கிளையிதழ் பறியாப்
பைவிரி யல்குற் கொய்தழை தைஇப்
பல்வே றுருவின் வனப்பமை கோதையெம்
மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி
யெரியவி ருருவி னங்குழைச் செயலைத் . . . .[105]
தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக
பொருளுரை:
கூறப்பட்ட (99) வகைவகையான பூக்களைப் பாறையில் குவித்தோம். மழைநீர் பெய்து கழுவிய பாறைமேல் குவித்தோம். அந்தப் பூக்களின் மேல் எங்களுகுக் கொள்ளை ஆசை [மால்]. தினைப்புனத்தில் பறவைகளின் ஒலி. நாங்களும் அவ்வப்போது பெரிய உயிர்ப்புக்குரல் கொடுத்துப் பறவைகளை ஓட்டினோம். எங்கள் குரலொலி மலையில் சிலம்பி எதிரொலித்தது.
தினைக்கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்தோம். செடிகொடிகளைத் தளிரோடு பறித்துத் தழையாடையாக்கி இடுப்பாடை மறைய உடுத்திக் கொண்டோம். குவித்த பூக்களால் பல்வேறு வகையான மாலைகள் தொடுத்து அணிந்துகொண்டோம். பின்னிய கூந்தலும், உச்சிக் கொண்டையும் அழகு பெறுமாறு பூக்களைச் சூடிக்கொண்டோம். அங்கே, அசோகமரம் எரியும் தீயைப்போல் பூத்திருந்தது. அப்பூக்கள் உதிர்ந்து சிவப்புக் கம்பளம் விரிந்தது போல் இருந்த அதன் மரத்தடியில் நிழலுக்காகத் தங்கியிருந்தோம்.
தண் நறும் தகரம் கமழ மண்ணி,
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா,
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழிசை . . . .[110]
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்பத் தேங்கலந்து
மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின்,
மலையவும், நிலத்தவும், சினையவும், சுனையவும்,
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
தண் நறும் தொடையல், வெண் போழ்க் கண்ணி, . . . .[115]
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி,
பைங்கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇச் செந்தீ
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ,
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்பச் சாந்து அருந்தி . . . .[120]
மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து,
தொன்று படு நறும் தார் பூணொடு பொலிய,
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக் கையின்
வண்ண வரிவில் ஏந்தி அம்பு தெரிந்து,
நுண் வினைக் கச்சைத் தயக்கு அறக் கட்டி, . . . .[125]
இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல்
துயல்வருந்தோறும் திருந்தடிக் கலாவ, . . . .[107 - 127]
தண்ணறுந் தகரங் கமழ மண்ணி
யீரம் புலர விரலுளர்ப் பவிழாக்
காழகி லம்புகை கொளீஇ யாழிசை . . . .[110]
யணிமிகு வரிமிஞி றார்ப்பத் தேங்கலந்து
மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின்
மலையவு நிலத்தவுஞ் சினையவுஞ் சுனையவும்
வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇய
தண்ணறுந் தொடையல் வெண்போழ்க் கண்ணி . . . .[115]
நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சிப்
பைங்காற் பித்திகத் தாயித ழலரி
யந்தொடை யொருகாழ் வளைஇச் செந்தீ
யொண்பூம் பிண்டி யொருகாது செரீஇ
யந்தளிர்க் குவவுமொய்ம் பலைப்பச் சாந்தருந்தி . . . .[120]
மைந்திறை கொண்ட மலர்ந்தேந் தகலத்துத்
தொன்றுபடு நறுந்தார் பூணொடு பொலியச்
செம்பொறிக் கேற்ற வீங்கிறைத் தடக்கையின்
வண்ண வரிவில் லேந்தி யம்புதெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி . . . .[125]
யியலணிப் பொலிந்த வீகை வான்கழ
றுயல்வருந் தோறுந் திருந்தடிக் கலாவ
பொருளுரை:
ஒருவன் வந்தவன் - அவன் தலைமயிர் சுருண்டிருந்தது. எண்ணெய் தடவிப் பளபளப்பாக இருந்தது. வயிரம் பாய்ந்த தகரக் கட்டையிலிருந்து வடித்தெடுத்த செண்டை மணம் கமழும்படி தடவியிருந்தான். மழையால் ஈரமாயிருந்த தலைமயிரை விரல்களை விட்டுப் பிரித்து உலர்த்திக் கொண்டிருந்தான்.
புகையும் அகில்கட்டையும் ஈரத்தைப் புலர்த்தின. அதன் மணத்தில் மயங்கிப் பொறிவண்டுகள் ஒலித்துக்கொண்டு அவனது குஞ்சியைச் சூழ்ந்து சுழன்று கொண்டிருந்தன. மணக்கும் மலர்க்கண்ணித் தொடையல் அவன் சென்னியை அழகுறுத்திக் கொண்டிருந்தது. தொடையலில் இருந்த பூக்கள் மலையிலும், நிலத்திலும் பூத்தவை. சினையிலும், சுனையிலும் பூத்தவை. ஆராய்ந்து பொறுக்கியெடுத்த பல்வேறு வண்ணம் கொண்டவை. அவன் மார்பில் வைரமாலையுடன் பூவிதழ்களாலான பித்திகைத் தொடையலும் தொங்கியது. ஒருபக்கம் காதோரத்தில் தலையொப்பனையாக அசோகப்பூவைச் செருகியிருந்தான்.
மலைக்குவடுபோல் நிமிர்ந்திருந்த அவன் நெஞ்சு தளிர் போன்று தளதளப்பாகவும் இருந்தது. மார்பில் சந்தனம் பூசியிருந்தான். மார்பின் அகலம் வலிமையும் விம்மித ஏற்றத்தன்மையும் கொண்டு மலர்ந்திருந்தது. அகலத்தில் பூண்மாலையும், பூமாலையும் பொலிந்தன. செம்மாந்து உயர்ந்த தோளோடு சேர்ந்த கைகளில் எய்யும் அம்போடு வரிந்துள்ள வில் இருந்தது. உடுத்தியிருந்த ஆடை நழுவாமல் இருக்க வேலைப்பாடுகள் கொண்ட கச்சை அணிந்திருந்தான்.
பகை புறங் கண்ட பல்வேல் இளைஞரின்,
உரவுச்சினம் செருக்கித் துன்னுதொறும் வெகுளும் . . . .[130]
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி,
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர,
நடுங்குவனம், எழுந்து நல்லடி தளர்ந்து யாம்
இடும்பை கூர் மனத்தேம், மருண்டு புலம் படர, . . . .[128 - 134]
பகைபுறங் கண்ட பல்வே லிளைஞரி
னுரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளு . . . .[130]
முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியா
மிடும்பைகூர் மனத்தே மருண்டுபுலம் படர
பொருளுரை:
அவன் ஈகைக்கழலில் வாகை நடை போட்டு நடந்துவதான். அவனது கால்களில் கழல். அது அவனது உயர்ந்த கொடைத்திறனின் அடையாளச் சின்னம். நடந்து வரும்போது அதில் ஒரு பொலிவு. போரில் பகைவரைப் பாழாக்கும் திறப்பகட்டும் அதில் தென்பட்டது. அவனைச் சூழ்ந்து இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர். பகைவரைப் புறங்கண்ட வேலுடன் அவர்கள் காணப்பட்டனர். அவன் இப்போது வேட்டைக்கு வந்துகொண்டிருந்தான். வேட்டை வாய்க்காததால் மகிழ்ச்சியில்லாத கண்களோடு வேட்டைநாய்கள் பல் தெரிய அவனைச் சூழ்ந்து வந்தன.
ஆ காண் விடையின், அணி பெற வந்து எம்
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி,
மெல்லிய இனிய மேவரக் கிளந்து எம்
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, “ஒண் தொடி
அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி . . . .[140]
மட மதர் மழைக் கண் இளையீர்! இறந்த
கெடுதியும் உடையேன்” என்றனன்........... . . . .[135 - 142]
தாகாண் விடையி னணிபெற வந்தெ
மலமர லாயிடை வெரூஉத லஞ்சி
மெல்லிய வினிய மேவரக் கிளந்தெ
மைம்பா லாய்கவி னேத்தி யொண்டொடி
யசைமென் சாய லவ்வாங் குந்தி . . . .[140]
மடமதர் மழைக்க ணிளையீ ரிறந்த
கெடுதியு முடையே னென்றன .................
பொருளுரை:
அவன் பசுவைப் பார்த்த காளை ஆனான். அவனைப் பார்த்ததும் நாங்கள் நடுங்கினோம். எழுந்து நடக்க முடியாமல் தள்ளாடினோம். நெஞ்சு படபடத்தது. மிரண்டு பார்த்துக்கொண்டே வேறிடம் நோக்கி நகர்ந்தோம். அவன் நிலையோ மாறுபட்டிருந்தது. விரும்பத்தக்க இனிய நிலத்தில் பசுவைக்கண்ட காளைபோல அவன் நெருங்கி வந்தான். நாங்கள் திண்டாடி மருள்வதைப் பார்த்து அவன் அஞ்சினான்.
கெடுதி செய்துவிட்டேன் போலும் – என்றான் மென்மை, இனிமை, விருப்பம் மூன்றும் கலந்து அவன் பேசினான். தலைவி கூந்தலின் ஒப்பனையழகைப் பாராட்டினான். ஒளிரும் வளையலும், ஒய்யாரமாக அசையும் மேனியழகும், அழகால் வளைந்து குழிந்த உந்தியும், மடமைத் திமிரி மழைபோல் ஈரப்பார்வை தரும் கண்களும் கொண்ட இளமான்களே! – என்று அழைத்தான். வரம்பு கடந்த கெடுதி செய்துவிட்டேன் போலும் – என்றான். அவன் சொல்லுக்கு நாங்கள் மறுமொழி கூறவில்லை. எனவே அவன் அல்லாந்தான், துன்புற்றான், கலங்கினான்.
சொல்லேம் ஆதலின், அல்லாந்து கலங்கிக்
“கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லியலீர்” என . . . .[145]
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின், இம்மென இமிரும்
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த
தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி, . . . .[150]
கல்லென் சுற்றக் கடுங்குரல் அவித்து, எம்
சொல்லற் பாணி நின்றனன் ஆக . . . .[142 - 152]
சொல்லே மாதலி னல்லாந்து கலங்கிக்
கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லிய லீரென . . . .[145]
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கைகவர் நரம்பி னிம்மென விமிரு
மாதர் வண்டொடு சுரும்புநயந் திறுத்த
தாதவி ழலரித் தாசினை பிளந்து
தாறடு களிற்றின் வீறுபெற வோச்சிக் . . . .[150]
கல்லென் சுற்றக் கடுங்குர லவித்தெஞ்
சொல்லற் பாணி நின்றன னாக
பொருளுரை:
பேசக்கூடாதா?. மென்மைத்தன்மை உள்ளவர்களே! கெடுதியை விடுவித்துச் சொல்லாவிட்டாலும் வாய்ச்சொல் தரலாமே. பேசினால் உங்களுக்குத் தீங்கு நேர்ந்துவிடுமோ? - என்றான்
அவன் என் சொல்லுக்காக காத்துக்கொண்டு நின்றான். பாலையாழில் நைவளப்பண்ணை மீட்டவல்லவன் அவன். காதல் கொண்ட வண்டினமும், சுரும்பினமும் விரும்பி அமர்ந்திருக்கும் பூங்கொத்துள்ள சிறுகிளை ஒன்றை ஒடித்துத் தன்னைச் சூழ்ந்து வரும் நாய்களை ஓட்டினான். களிறு மரக்கொம்புகளை ஒடித்து மதம் ஒழுகும் தன் காதோரத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டுவது போல ஓட்டினான். தலைவியின் சொல்லுக்காகக் காத்துக்கொண்டு நின்றான். காதலில் மயங்கி வரும் யானைபோல் தலைவியின் முன் வந்தான்.
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப,
தேம்பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து, . . . .[155]
சேமம் மடிந்த பொழுதின், வாய்மடுத்து
இரும் புனம் நிழத்தலின், சிறுமை நோனாது,
அரவு உறழ் அம் சிலை கொளீஇ, நோய்மிக்கு
உரவுச்சின முன்பால் உடல் சினம் செருக்கிக்
கணை விடு புடையூக் கானம் கல்லென . . . .[160]
மடி விடு வீளையர் வெடிபடுத்து எதிரக்
கார்ப் பெயல் உருமிற் பிளிறிச் சீர்த் தக
இரும்பிணர்த் தடக்கை இரு நிலம் சேர்த்திச்
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர, . . . .[165]
உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து,
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற் பொருந்திச்
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க,............ . . . .[153 - 169]
பிணையேர் நோக்கின் மனையோண் மடுப்பத்
தேம்பிழி தேறன் மாந்தி மகிழ்சிறந்து . . . .[155]
சேம மடிந்த பொழுதின் வாய்மடுத்
திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனா
தரவுற ழஞ்சிலை கொளீஇ நோய்மிக்
குரவுச்சின முன்பா லுடற்சினஞ் செருக்கிக்
கணைவிடு புடையூ?க் கானங் கல்லென . . . .[160]
மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக்
கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக
விரும்பிணர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்திச்
சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு
மையல் வேழ மடங்கலி னெதிர்தர . . . .[165]
வுய்விட மறியே மாகி யொய்யெனத்
திருந்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச்
சூருறு மஞ்ஞையி னடுங்க....................
பொருளுரை:
அப்போது, மதம் கொண்ட ஆண்யானை ஒன்று சிங்கம் போல அங்கு வந்தது. கதிர் அறுத்தபின் உள்ள தினைத்தட்டைப் புல்லை அறுத்து வேயப்பட்ட குடிசை. அதன் தலைவி மனையோள். மானைப்போல் மருண்டு பார்த்துக் கொண்டே தன் கணவனுக்குத் தேனில் பிழிந்தெடுத்த தேறல் கள்ளை ஊரெல்லாம் உறங்கும் நேரத்தில் ஊட்டிவிட்டாள். உண்ட அவன் யானைக் காவலுக்குச் சென்றான்.
பாம்பு போல் வளைந்த வில்லுடன் சென்றான். யானை விளைச்சலைப் பாழாக்குவது அவன் நெஞ்சை நோகச் செய்தது. அதனால் உரத்திலும், உடலிலும் தோன்றிய சினச் செருக்குடன் அம்பெய்யப் புடைத்துக் கொண்டும், வீளையொலி எழுப்பிக் கொண்டும், வெடி போட்டு முழக்கம் செய்து கொண்டும் காடெல்லாம் கலங்கும்படி சென்றான்.
மழை பெய்ய உருமும் இடிபோல் வெடி முழக்கம் கேட்ட யானை பிளிறிற்று. மதம் பிடித்தது போல் தன் கையை நிலத்தில் போட்டு மரங்களை அடியோடு சாய்த்தது. இரவு வேளையில் வெடி சத்தம் கேட்டு மருண்டு போயிருந்த யானை அப்போது பகல் வேளையில் மடங்கல் சிங்கத்தைக் கண்டு மேலும் மருண்டுபோய் அதனை எதிர்த்துத் தாக்கும் நிலையினதாய் அவளும் அவனும் இருக்கும் இடத்துக்கு ஓடி வந்தது. தினைப்புனம் காக்கும் பணியில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஈடுபடுவது வழக்கம். மகளிர் தினைக்கதிர்களைக் கவரவரும் பறவைகளை ஓட்டுவர். காளையர் அதனைக் கவரவரும் விலங்குகளை ஓட்டுவர். இப்பகுதியில் விலங்குகளை ஓட்ட வேட்டையாடிக்கொண்டு வரும் காளையர் பேசப்படுகின்றனர்.
முருகள்-வள்ளி கதை - முளைத்த வரலாறு. யானையைக் கண்டதும் பயந்து ஓடினோம். தப்பிக்கும் இடம் தெரியவில்லை. வளையல் குலுங்கி ஒலிக்கும்படி ‘ஒய்’ என்று கூவிக்கொண்டு ஓடினோம். நாணம் மறந்துபோய் விட்டது. நெஞ்சம் படபடத்தது. அவனை அணைத்துக்கொண்டு தலைவி நடுங்கினாள். மழைமேகத்தைக் கண்டால் மயில் ஆடுமல்லவா. அப்படி மழைமேகப்பேய் பிடித்த மயில்போல் நடுங்கினாள்.
உடு உறும் பகழி வாங்கிக் கடு விசை . . . .[170]
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்,
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழி தரப்
புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர், நெடுவேள்
அணங்கு உறு மகளிர் ஆடு களம் கடுப்பத் . . . .[175]
லுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை . . . .[170]
யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற்
புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப்
புள்ளி வரிநுதல் சிதைய நில்லா
தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே
ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் . . . .[175]
பொருளுரை:
அவன் யானை முகத்தில் அம்பு எய்தான் - நீண்ட கோலில் விண்மீன்போல் முனையுள்ள அம்பைக் கடுவிசையோடு அவன் எய்தான். களிற்றின் அழகிய முகத்தில் அது பாய்ந்தது. அப்புண்ணிலிருந்து குருதி பாய்ந்து ஒழுகியது. அதன் நெற்றியிலிருந்த புள்ளிகளும், வரிக்கோடுகளும் சிதைந்தன. அயர்ந்து போன அந்த ஆண்யானை அங்கே நிற்காமல் திரும்பி ஓடிவிட்டது. உடனே நாங்கள் முருகனுக்கு வெறியாடும் களத்தில் மகளிர் கைகோத்துக் கொண்டு ஆடுவதுபோல் கைகோத்துக் கொண்டோம்.
துணையறை மாலையின், கை பிணி விடேஎம்,
நுரையுடைக் கலுழி பாய்தலின் உரவுத் திரை
அடுங் கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை,
“அஞ்சில் ஓதி! அசையல்! யாவதும் . . . .[180]
அஞ்சல், ஓம்பு நின் அணி நலம் நுகர்கு” என
மாசு அறு சுடர் நுதல் நீவி, நீடு நினைந்து,
என் முகம் நோக்கி நக்கனன்.......... . . . .[169 - 183]
துணையறை மாலையிற் கைபிணி விடேஎ
நுரையுடைக் கலுழி பாய்தலி னுரவுத்திரை
யடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்தகை
யஞ்சி லோதி யசையல் யாவது . . . .[180]
மஞ்ச லோம்புநின் னணிநல நுகர்கென
மாசறு சுடர்நுத னீவி நீடுநினைந்
தென்முக நோக்கி நக்கன...................
பொருளுரை:
கை கோத்துக்கொண்டிருந்த நாங்கள் நுரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தில் பாய்ந்தோம் - முருகனுக்கு வெறியாடுவோர் கடப்பம்பூ மாலையை அணிந்திருப்பர். அந்த மாலை நெருக்கமாகப் பிணிக்கப் பட்டிருப்பது போல் நாங்கள் எங்களுடைய கைகளை ஒருவருக்கொருவர் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நுரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தில் பாய்ந்தோம். வெள்ளம் அரிக்கும்போது கரையோர வாழைமரம் ஆடுவது போல அப்போது தலைவி நடுங்கினாள்.
அவன் அவளை வெள்ளத்திலிருந்து தூக்கிக்கொண்டு கரைக்கு வந்தான். அவன் பெருந்தகையாளன். அழகே! அசையாதே. எதற்கும் அஞ்சாதே. உன் அழகை நான் சுவைக்க வேண்டும் – என்றான். வந்தான். அவளது நெற்றியைத் தடவிக்கொடுத்தான். ஏதோ நெடுநேரம் எண்ணிப்பார்த்தான். என்னைப் பார்த்தான். ஒரு சிரிப்பு சிரித்துவிட்டன். அவளை அவன் நுகர நான் விலகிக்கொள்ளவேண்டும் என்பது அந்தச் சிரிப்பின் பொருள்.
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர,
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ, . . . .[185]
ஆகம் அடைய முயங்கலின் அவ்வழி
பழு மிளகு உக்க பாறை நெடுஞ்சுனை
முழு முதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தென,
புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல், . . . .[190]
நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும், சாரல்
வரையர மகளிரின் சாஅய் விழைதக, . . . .[195]
நாணு முட்கு நண்ணுவழி யடைதர
வொய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ . . . .[185]
யாக மடைய முயங்கலி னவ்வழிப்
பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை
முழுமுதற் கொக்கின் றீங்கனி யுதிர்ந்தெனப்
புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவி
னெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேற . . . .[190]
னீர்செத் தயின்ற தோகை வியலூர்ச்
சாறுகொ ளாங்கண் விழவுக்கள நந்தி
யரிக்கூட் டின்னியங் கறங்க வாடுமகள்
கயிறூர் பாணியிற் றளருஞ் சாரல்
வரையர மகளிரிற் சாஅய் விழைதக . . . .[195]
பொருளுரை:
நாணமும், அச்சமும் கொண்டு நான் பிரிந்துவிட்டேன். அது மயிலாடும் பாறை. சுனையில் பலாப்பழத் தேன் ஒழுகியது. அச்சமும் நாணமும் ஓடிப்போக வேண்டிய இடத்துக்கு ஓடிப் போய்விட்டன. ‘ஒய்’ என்று அவள் நெஞ்சை அவன் தன் நெஞ்சில் அணைத்துத் தழுவிக்கொண்டான். அவள் பிரிய முயன்றாள். அவன் விடவில்லை. பழுத்த மிளகு உதிர்ந்து கிடந்த பாறை. பக்கத்தில் நீண்ட சுனை. அதில் முழு மாம்பழம் ஒன்று விழுந்தது. உள்ளுறை - சுனை – பெண்ணுறுப்பு, மிளகு – பெண்ணுறுப்பில் உள்ள பருப்பு, மாம்பழம் – ஆண் விந்து. பக்கத்து மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அதிலிருந்து பலாத்தேன் சுனையில் ஒழுகியது. அதைத் தண்ணீர் என்று கருதி மயில் பருகியது. மயங்கி ஆடியது. உள்ளுறை - பலாத்தேன் – அவள் உறுப்பின் ஊறல், மயில் – தலைவி, மயக்கம் – கலவி மயக்கம். ஊரிலே திருவிழா. கயிற்றில் ஏறிப் பெண் ஆடினாள். உறுமுதலும் தட்டலும் கேட்கும் மேளத்தின் பாணிக்கேற்ப ஆடினாள். இந்த ஆடுமகள் கயிற்றின்மேல் ஏறி ஆடுவதுபோல் மயில் மரக்கிளையில் ஏறி ஆடியது. மலையில் வாழும் அரம்பையர் போல் சாயல் கொண்டவை அந்த மயில்கள். உள்ளுறை - கயிறூர் பாணி – அவர்கள் மோதி விளையாடியது.
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின், கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெருவிறல் . . . .[186 - 199]
டண்கம ழலரி தாஅய் நன்பல
வம்புவிரி களத்திற் கவின்பெறப் பொலிந்த
குன்றுகெழு நாடனெம் விழைதரு பெருவிற
பொருளுரை:
தலைவியைத் தழுவிய தலைவன் யார்? குன்றுகள் நிறைந்த நாட்டுக்குத் தலைவன். எல்லாரும் விரும்பும் பெருமையும் பீடும் உடையவன். அவன் மலையுச்சியில் காந்தள் மலர்ந்திருக்கும். அவை உதிர்ந்து கிடக்கும் பரப்பில் புதியதோர் மணம் கமழும். இப்படிப்பட்ட நிலப்பரப்புகள் கொண்ட நாட்டுக்குத் தலைவன்.
“சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலர் உண
பைந்நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசையில் வான் திணைப் புரையோர் கடும்பொடு . . . .[205]
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை,
நின்னோடு உண்டலும் புரைவது” என்று ஆங்கு
அறம் புணை ஆகத் தேற்றி,................ . . . .[200 - 208]
சாறயர்ந் தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலருணப்
பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில்
வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு . . . .[205]
விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங்
கறம்புணை யாகத் தேற்றிப் ......................
பொருளுரை:
ஊரறியத் திருமணம் செய்துகொள்வேன், இல்லறத்தில் விருந்தோம்பல் என்னும் தெப்பத்தில் ஏறி இன்பமாகச் செல்லலாம் - என்றான். எங்களுடைய உள்ளக் கிடக்கையை அவன் படித்தான். எங்களைத் தேற்றினான். என்ன சொல்லித் தேற்றினான்? திருமண விழாவை ஊர்த்திருவிழாவாக நடத்துவேன். மிடாமிடாவாய்ச் சமைத்த சோற்றை வந்தவர்க்கெல்லாம் வழங்குவேன்.
திருமண வளநகர் (வளமனை) ஊரார் எல்லாருக்கும் திறந்திருக்கும். அதற்குள் எல்லாரும் தடையின்றி நுழையலாம். வந்தவர்களுக்கெல்லாம் புலவுச்சோறு. (பிரியா1ணி) அதில் நெய்யும் ஒழுகும். குடும்பத்தைச் சேர்ந்த உற்றார் உறவினர்களும் விருந்தினரோடு விருந்து உண்பர். அவர்கள் உண்டபின் மீதம் இருப்பதைப் பிணைந்து கவளமாக உன்னோடு சேர்ந்து நான் உண்பது எனக்குப் பெருமை தரும் செயல். இல்வாழ்க்கை நீரோட்டத்தில் விருந்தோம்பல் என்னும் அறநெறிப் புணையில் ஏறிக்கொண்டு நாம் இன்பமாகச் செல்வோம் – என்று தேற்றினான்.
மீ மிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது,
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி, . . . .[210]
அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சமர்ந்து
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி,
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூ மலி சோலை அப்பகல் கழிப்பி,
எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சிப் . . . .[215]
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய, . . . .[208 - 216]
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழு
தேமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி . . . .[210]
யந்தீந் தெண்ணீர் குடித்தலி னெஞ்சமர்ந்
தருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி
வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும்
பூமலி சோலை யப்பகல் கழிப்பி
யெல்லை செல்ல வேழூர் பிறைஞ்சிப் . . . .[215]
பல்கதிர் மண்டிலங் கல்சேர்பு மறைய
பொருளுரை:
அறப்புணையில் செல்லலாம் என்று சொல்லித் தேற்றியபின் அதனை உறுதிப்படுத்துவானாய் மலைத்தெய்வம் முருகன் பெயரைச்சொல்லி முருகனையும் என்னையும் வாழ்த்தினான். அவனையும் என்னையும் தொழுதான். சொன்னசொல் தவறமாட்டேன் என்று வஞ்சினம் கூறினான். அதனை என் நெஞ்சம் விரும்பியது. துன்பம் இன்பமாக மாறியது. யானை தந்த புணர்ச்சி இது. வானம் எங்களுக்கு ஆடையாயிற்று. மயங்கியவர்கள் விரும்பும் பூஞ்சோலையில் அன்றைய பகல் பொழுதை அவனோடு கழித்தேன். ஞாயிறு மேலைமலையில் மறைந்தது.
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவப் . . . .[220]
பாம்பு மணி உமிழப் பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,
ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட, வள மனைப்
பூந்தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,
அந்தி அந்தணர் அயரக் கானவர் . . . .[225]
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,
வானம் மாமலைவாய் சூழ்பு கறுப்புக் கானம்
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத்
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ, . . . .[215 - 230]
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதர
வேங்குவயி ரிசைய கொடுவா யன்றி
லோங்கிரும் பெண்ணை யகமட லகவப் . . . .[220]
பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவல
ராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற
வாம்ப லாயிதழ் கூம்புவிட வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
யந்தி யந்தண ரயரக் கானவர் . . . .[225]
விண்டோய் பணவை மிசைஞெகிழி பொத்த
வான மாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானங்
கல்லென் றிரட்டப் புள்ளின மொலிப்பச்
சினைஇய வேந்தன் செல்சமங் கடுப்பத்
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ . . . .[230]
பொருளுரை:
பொழுது போனபின் இரவும் பகலும் மால்-மயங்கம் கொள்ளும் மாலைக்காலம் வந்தது. மான்கூட்டம் மரத்தடியில் படுத்துக்கொண்டு அசைபோட்டது. பசுக்கள் கன்றுகளுக்காகக் கனைத்துக்கொண்டே மன்று திரும்பின. அன்றில்கள் பெண்ணைமரத்தில் இருந்துகொண்டு அகவின. அக்குரல் கொம்பூதுவது போல் இருந்தது. பாம்புகள் வெளிச்சத்துக்காக மணியைக் ககக்கின (நம்பிக்கை) கோவலர் ஆம்பல்கொடியில் செய்த புல்லாங்குழலை ஊதிக்கொண்டும், இடையிடையே தம் ஆனிரைகளைத் தெளிவாகப் பெயர்சொல்லி விளித்து அவற்றை விரைந்து செல்லுமாறு தூண்டிப் பயிற்றுவித்துக் கொண்டும் சென்றனர். ஆம்பல் பூவின் போது விரியத் தொடங்கியது. வளமனைகளில் வாழும் மகளிர் விளக்கேற்றித் தூண்டி விடலாயினர். அந்தணர்கள் அந்தி வேளையைத் தொழும் விழாவினைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
மலைவயல்களில் பணவை என்னும் பந்தலின் மேல் ஏறி இருந்துகொண்டு கானவர் பயிரை அழிக்கவரும் விலங்குகளை அச்சுறுத்துவதற்காக ஞெகிழி என்னும் தீப்பந்தத்தை ஏற்றினர். வானம் கறுத்தது. புள்ளினங்கள் ‘கல்’லென ஒலித்துக்கொண்டு இருப்பிடம்நோக்கி வானமெங்கும் பறந்து சென்றன. அது சினங்கொண்ட வேந்தன் போர் முடிந்தபின் வீடு திரும்புவது போல இருந்தது.
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்,
கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!” என
ஈர நல் மொழி தீரக் கூறி,
துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து, . . . .[235]
துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண் துறை நிறுத்துப் பெயர்ந்தனன்............... . . . .[231 - 237]
நாடறி நன்மண மயர்கஞ் சின்னாட்
கலங்க லோம்புமி னிலங்கிழை யீரென
வீர நன்மொழி தீரக் கூறித்
துணைபுண ரேற்றி னெம்மொடு வந்து . . . .[235]
துஞ்சா முழவின் மூதூர் வாயி
லுண்டுறை நிறுத்துப் பெயர்ந்தன .................
பொருளுரை:
நாடறியும் திருமணம் - நெருக்கமாகக் கட்டிய மாலையைப் போட்டு உன் பெற்றோர்கள் உன் முன்கைகளைப் பற்றி எனக்குத் தர நான் நாடறியும் நல்ல திருமணம் செய்துகொள்ளும் விழா எடுப்பேன். சிலநாள் கலங்காதிருப்பாயாக – என்றான். அன்பு மொழிகள் அனைத்தையும் சொன்னான். பசுவுக்குத் துணையாக வரும் காளைபோல் என்னுடன் வந்தான். ஊருக்குள் நுழையும் வாயில் வரையில் வந்தான். ஊரில் மாலைக்காலத்து முழவொலி கேட்டது. அங்கே என்னை நிறுத்திவிட்டுத் திரும்பிவிட்டான். அன்றுமுதல்...
அன்றை அன்ன விருப்பொடு, என்றும்
இரவரல் மாலையனே, வருதோறும் . . . .[237 - 239]
டன்றை யன்ன விருப்போ டென்று
மிரவரன் மாலைய னேவரு தோறுங் . . . .[237 - 239]
பொருளுரை:
அன்று முதல் இரவில் வருதல் அவனுக்கு வழக்கமாயிற்று - பின்னர், நாள்தோறும் இரவில் வந்து கெஞ்சினான் அன்று என்னை அடைந்த அதே ஆவலோடு ஒவ்வொரு நாளும் என்னிடம் வந்து என்னைத் தனக்குத் தரும்படி கெஞ்சினான். மாலைபோல் தொடர்ந்து நெருங்கிக் கேட்டான்.
நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்,
வேய் புரை மென் தோள் இன்துயில்
பெறாஅன், பெயரினும், முனியல் உறாஅன்,
நீதுயி லெழினு நிலவுவெளிப் படினும்
வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும்
பெறாஅன் பெயரினு முனிய லுறாஅ
பொருளுரை:
தடைகள் நேர்ந்து இவள் இன்பம் கிடைக்காவிட்டால் சலிப்பில் சினம் கோள்ளமாட்டான் - ஊர்க்காவலர் விரைந்து வரினும், புதியவனாகிய இவனைக் கண்டு சினந்து நாய் குரைப்பினும், அன்னையாகிய நீ துயில் எழுந்துவிடாலும், நடமாடுபவர் தெளிவாகத் தெரியும்படி நிலாவெளிச்சம் காய்ந்தாலும் அவன் இவளை அடைவதற்குத் தடையாக இருக்கும். இவளோடு இன்பத் துயில் கொள்ளும் வாய்ப்பு கிட்டாமல் போகும். அப்போதெல்லாம் அதற்காக அவன் சினம் கொள்ளமாட்டான்.
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர் . . . .[245]
மாய வரவின் இயல்பு நினைஇத் தேற்றி,
நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா,
ஈரிய கலுழுமிவள் பெரு மதர் மழைக் கண்
ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும்
வலைப் படு மஞ்ஞையின் நலம் செலச் சாஅய், . . . .[250]
நினைத்தொறும் கலுழுமால் இவளே கங்குல் . . . .[245 - 251]
றன்னிலை தீர்ந்தன்று மிலனே கொன்னூர் . . . .[245]
மாய வரவி னியல்புநினைஇத் தேற்றி
நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா
வீரிய கலுழுமிவள் பெருமதர் மழைக்க
ணாகத் தரிப்பனி யுறைப்ப நாளும்
வலைப்படு மஞ்ஞையி னலஞ்செலச் சாஅய் . . . .[250]
நினைத்தொறுங் கலுழுமா லிவளே கங்கு
பொருளுரை:
அவன் அழவில்லை இவள் அழுகிறாள் - அவன் இளமை மாறாதவன், வளமை குறையாதவன், தன் தகைமையிலிருந்து நழுவாதவன், சும்மாக் கிடக்கும் ஊரில் இப்படி மாய நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும் என்பதனை நன்கு உணர்ந்தவன். இந்நிகழ்வுகளை வெறுக்காமல் இவளைப் போற்றுவான். மலரை அடிக்கும் மழைநீர் போன்றவை அவை என்று எண்ணிக்கொள்வான். அவன் அப்படி, இவள் எப்படி? இவளது கண்ணில் ஈரம், பெருகிய மதமதப்பு. அது மழையாக மாறியது. அவள் மார்பகத்தில் அரிக்கும் பனியாகிப் பொழிந்தது. வலையில் பட்ட மயில்போல் மேனியழகு குன்றி வதங்குகிறாள். நினைக்கும் போதெல்லாம் திரும்மத் திரும்ப அழுகிறாள்.
புழல் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமும், சூரும், இரை தேர் அரவமும், . . . .[255]
ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும்
கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்,
புழற்கோட் டாமான் புகல்வியுங் களிறும்
வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத்
துருமுஞ் சூரு மிரைதே ரரவமு . . . .[255]
மொடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங்
கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமு
பொருளுரை:
இவள் கலங்குவதெல்லால் அவன் வரும் வழியில் இடர்ப்பாடுகள் உள்ளனவே என்பதுதான். குகையில் பதுங்கும் புலி, சிங்கம், கரடி, முட்டித் தள்ளும் கொம்புகளையுடைய காட்டாட்டுக் கடா, எதிர்த்துப் போரிடும் ஆண்யானை போன்றவற்றைத் தாக்கி அழிக்கும் வெஞ்சினம் அவனுக்கு இருந்தது. என்றாலும் இடி, பேய், இரை தேடும் மலைப்பாம்பு ஆகியவற்றிற்கு அவன் என் செய்வான்? நீர்க்குழிகள், நீர்ச்சுழிகள், அவற்றில் இரைதேடும் முதலை, இடங்கர், கராம் முதலான முதலையினத்துக்கு அவன் என்ன செய்வான்? – என்று கலங்குகிறாள்.
பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,
வழுவின் வழாஅ விழுமம், அவர் . . . .[260]
குழுமலை விடர் அகம் உடையவால் எனவே. . . .[251 - 261]
பழுவும் பாந்தளு முளப்படப் பிறவும்
வழுவின் வழாஅ விழுமமவர் . . . .[260]
குழுமலை விடரக முடையவா லெனவே.
பொருளுரை:
அவனுக்கு நேரக்கூடிய மேலும் பல இடர்ப்பாடுகளை எண்ணி இவள் கலங்குகிறாள். வழிப்பறி செய்வோர் பதுங்கும் இடம், வழுக்கு நிலம், கால் போன போக்கில் சென்று வழியின்றி முட்டிக்கொள்ளும் இடங்கள், பேய், மலைப்பாம்பு, போன்றவை உளப்படப் பிறவற்றால் நேரும் வழித்துன்பங்களும் மலை பிளந்திருக்கும் பாதையில் உண்டாயிற்றே என்று கலங்குகிறாள். எனவே இவளை அவனுக்கு ஊரறிய திருமணம் செய்துவைத்துச் சேர்த்துவைக்க வேண்டும் - என்று தாயரிடம் தோழி அறத்தொடு நிற்கிறாள்.
பிற்காலத்தில் இந்த நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள தனிப்பாடல்
என் குற்றம் யானும் உணர்கலேன்; - பொன் குற்று
அருவி கொழிக்கும் அணி மலை நாடன்
தெரியுங்கால், தீயது இலன்....................... . . . .[1]
என்குற்றம் யானு முணர்கலேன்- பொன்குற்
றருவி கொழிக்கு மணிமலை நாடன்
தெரியுங்காற் றீய திலன் . . . .[1]
பொருளுரை:
அன்னையே! நீ இவளை தினைப்புனம் காவலுக்கு அனுப்பிவைத்தாயே! அதுவும் குற்றம் இல்லை. வளையல் வரிசையை உடைய இவளும் பண்புள்ளவள். என் குற்றமும் எனக்குத் தெரியவில்லை. எண்ணிப் பார்த்தால் அவனும் தீய செயல் புரியவில்லை. மேலும் அவன் மலையிலிருந்து விழும் அருவிகூடப் பொன்னைக் கொட்டும் அளவுக்கு அவன் செல்வவளம் மிக்கவன். எனவே திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்கிறாள் தோழி.
போற்றிப் புனைந்த பொருளிற்றே- தேற்ற
மறையோர் மணம் எட்டின் ஐந்தாம் மணத்தின்
குறையாக் குறிஞ்சிக் குணம்................... . . . .[2]
போற்றிப் புனைந்த பொருளிற்றே- தேற்ற
மறையோர் மணமெட்டி னைந்தா மணத்திற்
குறையாக் குறிஞ்சிக் குணம் . . . .[2]
பொருளுரை:
வடமொழி வேதத்தில் கூறப்பட்டுள்ள 8 வகையானதிருமண முறைகளில் இது ஐந்தாவதாகக் கூறப்பட்டுள்ள முறை. அந்த 8 திருமணங்கள் இன்பம் நுகரச் செய்துவைக்கப்பட்டவை. இந்தக் குறிஞ்சிக் குணத் திருமணமோ அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் நுகர்வதற்காக இயல்பாக ஒன்று கூடி நிகழ்ந்தது. எனவே அந்த ஐந்தாவதை விட இது மேலானது.