அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 008

களிற்றியானை நிரை


களிற்றியானை நிரை

கங்குலும்‌ அரிய அல்ல!

பாடியவர்‌ : பெருங்குன்றூர்‌ கிழார்‌.
திணை : குறிஞ்சி.
துறை : தலைமகள் கூற்று - தலைமகன்‌ சிறைப்புறத்தானாகத்‌, தோழிக்குச்‌ சொல்லுவாளாய்த்‌ தலைமகள்‌ சொல்லியது.

(தலைவி, தலைவன்‌ மேல்‌ உள்ளங்கலந்த காதல்‌ உடையவள்‌. அவனைக்‌ கணமும்‌ பிரியப்‌ பொறுக்காதவள்‌. அவள்‌ மனம்‌ தமக்குள்‌ விரைந்து மணவினை நிகழ்வதை விரும்புகிறது. இரவுக்குறியிடத்தே அவனைத்‌ தேடி வந்தவள்‌, அவ்வருகையின்‌ அருமை புலப்படக்‌ கூறித்‌ தலைவனின்‌ உள்ளத்தைத்‌ திருமண ஏற்பாட்டிலே திருப்ப முயலுகின்றனள்‌.)

ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய . . . . [05]

கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய . . . . [10]

பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் . . . . [15]

சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே
- பெருங்குன்றூர் கிழார்.

பொருளுரை:

தோழி! பிளந்த வாயினையுடைய அண்புலி ஒன்று, பெரிய பன்றியினைக்‌ கொன்று வீழ்த்தியது. பலாமரங்கள்‌ செறிந்த பக்கமலைச்‌ சாரலில்‌, எங்கும்‌ புலால்‌ நாற்றம்‌ எடுக்க, அதனை இழுத்துச்‌ சென்றது. அப்படிப்‌ புலி செல்லுகின்ற, மூங்கில்கள்‌ தம்முள்‌ உரசி உரசி ஒலிசெய்கின்ற, மலை அது. அவ்விடத்திலே, சுரபுன்னையோடு வாழை மரங்களும்‌ ஓங்கி வளர்ந்துள்ள பகுதி ஒன்று. அவ்விடத்தே, பள்ளமான நீர்‌ அறாத ஒரு குழியிலே, கடுமையான இயல்பினையுடைய களிற்றியானை ஒன்று வீழ்ந்து பட்டது. அதன்‌ வருத்தத்தைத்‌ தீர்க்கும்‌ பொருட்டாக அதனுடைய பிடியானையானது, பெரிய பெரிய மரங்களைக்‌ குழியினின்றும்‌ களிறு ஏறி வருவதற்கு ஏற்றபடியாக, முறித்து முறித்துப்‌ போட்டது. அப்போது எழுந்த மரம்‌ முறிபடும்‌ ஓசையானது, விண்ணைத்‌ தழுவ விளங்கும்‌ அம்மலையின்‌ குகைகளில்‌ எல்லாம்‌ எதிரொலித்தது. அத்தகையதான அவருடைய மலைநாட்டிலே, எண்ணற்கும்‌ அரியவான மான்களின்‌ செலவினால்‌ ஏற்பட்ட காலடித்தடம்‌ பதிந்து விளங்கும்‌ கவறுபட்ட வழிகளுள்‌ சென்று, யாம்‌ மயங்கவில்லை. மின்னல்‌ வழிகாட்டச்‌, சிறுகச்‌ சிறுக நடந்தோம்‌. மெல்ல மெல்ல வந்து சேர்ந்தோம்‌. இவ்விடத்து, "மழைத்‌ துளிகளைத்‌ தம்மிடத்தே கொண்ட, நீலமணி போலும்‌ அழகிய, ஐவகையாக முடிக்கப்பெற்ற கூந்தலை, நும்பிடரியானது மறையுமாறு பின்புறமாக வாரி முடித்து, முடித்த அத்‌ தொகுதியைப்‌ பிழிந்து கொண்டே வருபவரே! முறையற்ற வகையிலே வழிகள்‌ பின்னிக்‌ கிடக்கும்‌ இச்சுரத்தின்கண்‌ வருவதற்குரிய நேரிய வழியினை நீவிர்‌ இதற்குமுன்பே அறியவும்‌ அறிவீரோ". என்று, நம்மீது பரிவுடன்‌ கேட்கும்‌ அன்புடையாரை மட்டும்‌ யாம்‌ பெற்றோமில்லை. பெற்றோமானால்‌,

“ஈயல்களையுடைய புற்றுக்களின்‌ குளிர்ந்த மேற்புறத்தே தங்கிய புற்றாஞ்‌ சோறாகிய இறையினைப்‌, பெரிய கையினையுடைய ஆண்‌ கரடியானது எடுக்கும்‌; அப்போது, அதன்‌ தொங்கும்‌ தோல்‌ உரைக்குள்‌ பொருந்தியிருக்கும்‌ கூர்மையான நகங்கள்‌ பற்றிக்கொள்ளுவதனால்‌ அப்புற்றினுள்ளே இருக்கும்‌ பாம்பும்‌ தனது வலிமை அழிந்துபோம்‌. அத்தகைய, இம்‌ மழைக்காலத்து நள்ளிரவும்‌, காட்டு வழியும்‌, நமக்குக்‌ கடந்து வருதற்குக்கூட அரியதன்று.

சொற்பொருள்:

3. துதிய உகிர்‌ - உறைபுக்க நகம்‌. 4. பானாள்‌ - பாதிநாளாகிய இரவு, நள்ளிரவும்‌ ஆம்‌. 6. ஏற்றை - புலி ஏறு. 9. அசும்பு - மலையிலுள்ள சேற்றுக்‌ குழி. பூசல்‌ - மரத்து ஓசை. 12. விடரகம்‌ - மலைக்குகை. 13. மான்‌ அதர்‌ - மான்கள்‌ செல்லும்‌ தடம்‌ பதிந்த வழி. 14. மின்னுவிட - மின்னல்‌ வழிகாட்ட.

உள்ளுறை பொருள்கள்‌:

1. கரடிக்குப்‌ பாம்பை வருத்த வேண்டும்‌ என்னும்‌ கருத்துச்‌ சிறிதும்‌ இல்லை. எனினும்‌, அது தன்‌ காரியம்‌ செய்யவே, அதன்‌ நகங்கள்‌ படுதலாற்‌ பாம்பும்‌ துயருற்றது. அதுபோல, அவரும்‌ நம்மை வருத்தும்‌ எண்ணம்‌ உடையவரல்லர்‌. எனினும்‌, அவர்‌ தமது காரியமாகிய களவின்ப நுகர்விலேயே ஒழுகுதலால்‌, நாமும்‌, இவ்வாறு எதிர்பாராத பல வருத்தங்களுக்கு உள்ளாகின்றோம்‌.

2. பலாப்பழத்தின்‌ நாற்றமுடைய மலைச்சாரலிலே, பன்றியைக்‌ கொன்று இழுத்துவருதல்‌ மூலம்‌, புலால்‌ நாற்றம்‌ எவ்விடத்தும்‌ கமழச்‌ செய்துவிட்டது புலி. அதுபோல, அவரும்‌ தம்‌ இன்ப நாட்டத்தால்‌ நம்மைக்‌ களவிலே கூடி, நம்‌ சிறப்புடைய குடிக்கு ஊரின்கண்‌ எழுந்த அலரினை உண்டாக்கிவிட்டனர்‌

3. வாழைக்‌ காட்டிலே வாழையினை உண்ணவந்த களிறு, அதனையும்‌ இழந்து, குழியுள்ளும்‌ சிக்கியது, அதன்‌ துயர்‌ தீர்க்கப்‌ பிடியானை மரங்களை முறித்‌துப்‌ போட்டது. அது மரங்களை முறிக்கும்‌ ஒலி எங்கும்‌ கேட்டது. அதுபோல்‌, அவரும்‌ நமது நலம்‌ நுகர விரும்பி வந்தார்‌. களவு ஒழுக்கமாகிய குழியிலே சிக்கினார்‌. அதனின்றும்‌ கரையேற வழியறியாது மயங்கினார்‌. அதனை விட்டு வரையவும்‌ மாட்டாது, நம்‌ வீட்டுக்‌ காவலின்‌ அருமையினால்‌ நம்மை அடையவும்‌ மாட்டாது துயருற்றார்‌. அதனைப்‌ போக்க, அறத்தொடு நிற்றல்‌ முதலியவற்றால்‌ நாமே வரைந்து மணந்துகொள்ள முயன்றாலோ, ஊர்‌ எல்லாம்‌ அலர்‌ பெரிதாக எழுகின்றதே? இஃது என்னையோ?