அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 013

களிற்றியானை நிரை


களிற்றியானை நிரை

புலம்பொடு வந்த வாடை!

பாடியவர்‌ : பெருந்தலைச்சாத்தனார்‌.
திணை : பாலை.
துறை : தோழி கூற்று - பொருள்வயிற்‌ பிரியலுற்ற தலைமகனைத்‌ தோழி செலவழுங்கு வித்தது; உடம்பட்டதூஉம்‌ ஆம்‌.
சிறப்புற்றோன்‌ : தென்னவன்‌ மறவனான கோடைப்பொருநன்‌ பண்ணி.

(பொருள்‌ தேடிவருவதற்காகத்‌ தன்‌ தலைவியைப்‌ பிரிந்து வேற்றுநாடு செல்ல விரும்புகின்றான்‌ ஒரு தலைவன்‌. “அதனால்‌, தலைவி தன்‌ உயிரையே இழந்துவிடவும்‌ கூடும்‌” என்று கூறி, அவனைச்‌ செல்லாது தடுக்கின்றாள்‌ தோழி. அல்லது, யாம்‌ துன்புற்றாலும்‌ சகித்திருப்போம்‌; நின்‌ முயற்சி நன்கு நிறைவுறுக' என, அவன்‌ போதற்கு இசைகின்றாளும்‌ ஆம்‌.)

தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் . . . . [05]

திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் . . . . [10]

பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட . . . . [15]

மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
கவவு இன் புறாமைக் கழிக வள வயல்,
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, . . . . [20]

புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
வெண் குருகு நரல, வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே!
- பெருந்தலைச் சாத்தனார்.

பொருளுரை:

தன்னுடைய தென்கடலிலே பிறந்த முத்தினைக்‌ கோத்து அந்த ஆரத்தை அணிந்தவன்‌; பகைவர்‌ பணிந்து திறை கொடுக்கும்‌ ஆற்றலினை யுடையவனும்‌, தன்னுடைய பொதிய மலையினிடத்தே கோயில்‌ கொண்டிருப்பவனும்‌, பிறரால்‌ வெற்றி கொள்ளப்படுவதற்கு அரியவனுமாகிய முருகக்‌ கடவுளை வழிபட்டுக்‌, குறவர்கள்‌ கொணர்ந்து தந்த சந்தன ஆரத்தையும்‌ அணிந்தவன்‌; அத்தகைய பெருமையையுடைய இரண்டு ஆரங்களையும்‌ அழகுற அணியும்‌, திருமகள்‌ விரும்பும்‌ மார்பினை யுடையவன்‌, தென்னவனாகிய பாண்டியன்‌.

குழியிலே வீழ்த்திக்‌ கைக்கொண்ட பழகாத யானைகளைத்‌, தன்‌ ஏவலினால்‌ செயற்படும்படி உணர்த்‌ துவிக்கின்ற சிறுபொழுது அல்லாமல்‌, பிற பொழுதுகள்‌ எல்லாம்‌, ஒரு வரையறை ஏதும்‌ இல்லாமல்‌, இரவலர்களுக்கு வாரி வாரி வழங்கிக்‌ கொண்டே இருப்பவன்‌; கூர்மை வாய்ந்த அம்பினை உடையவன்‌; கோட்டைக்குத்‌ தலைவன்‌; பாண்டியனின்‌ படைத்தலைவன்‌ பண்ணி என்னும்‌ பெயரினன்‌. அவன்‌ இயற்றிய, பயன்‌ மிகுந்த களவேள்வியினும்‌ காட்டில்‌, நீர்‌ தேடி வருவதாகக்‌ கூறும்‌ பொருளால்‌ சிறந்த பயன்‌ நிகழுமாயினும்‌ -

மேகங்கள்‌ தெற்கே சென்றனவாக, மிக்க மழையினைப்‌ பொழிந்த, மழைக்காலத்‌ தன்மையைக்‌ கொள்ளும்‌ கூதிர்க்‌ காலத்துச்‌, சாயலிற்‌ சிறந்த இனிய துணைவியான இவளைப்‌ பிரிந்து, வேற்று நாட்டிலே நீர்‌ தங்குவீராயின்‌, நீர்‌ தேடுகின்ற பொருள்கள்‌, எவ்வித இடையூறும்‌ இல்லாது வந்து வாய்ப்பனவாக! தக்க இடத்திலே, குற்றமற்ற தூய விரிப்பு விரிக்கப்பெற்ற படுக்கையினிடத்தே, இவளைத்‌ தழுவிப்‌ பெறுகின்ற இன்பமானது, நுமக்கு வாயாமற்‌ கழிந்து போயினும்‌ போவதாக!

வளமுடைய வயல்களிலே, நெருப்பின்‌ கொழுந்தினைப்‌ போன்ற தோடுகளை ஈன்ற, வயல்‌ நெல்லின்‌ பலவாகக்‌ கிளைத்த முதலிலிருந்து தோன்றி நிரம்பிய நெற்கதிர்கள்‌, அகன்ற வயலினிடத்து வரப்புக்களையே அணையாகக்‌ கொண்டு கிடந்து அலையுமாறு, தனிமையாகிற துன்பத்தினை மேற்கொண்டு வருகின்ற தன்மையது, பனிக்காலத்‌ தன்மையினைக்‌ கொண்ட வாடைக்காற்று. அக்காற்றானது பூக்கள்‌ விளங்கும்‌ கரும்பினது ஓங்கின தண்டின்‌ மீதிருக்கும்‌ வெண்மையான நாரையானது ஒலிக்கும்படியாகவும்‌ வீசும்‌. அத்தகைய வாடை வந்து வருத்தும்‌, நுண்மையான பல துளிகளைக்‌ கொண்டு விளங்குவது குளிருகின்ற பனிக்காலம்‌!

சொற்பொருள்:

2. பேணி - பூசை பண்ணி. 7. மராஅ மருவாத. 11. தை இய - செய்த. வேள்வி - களவேள்வி. 13. பொழுது - காலத்தன்மை. 18. அழல்‌ நுதி - அழற்கோடு. தோகை நெற்றோடு; கடைகூர்த்துச்‌ சிவந்திருத்தலினால்‌ அவ்வாறு கூறினர்‌.

விளக்கம்‌:

கூதிர்க்‌ காலத்திலே, பிரிவின்‌ வேதனை மிகுதியினால்‌ அவள்‌ பெரிதும்‌ துயருற்று நலிவாள்‌; அதனால்‌ அவள்‌ நின்‌ போக்கை நிறுத்துக என்று கூறியதாம்‌. அன்றி, பிரிவுக்கு உடம்பட்டதாயின்‌, அக்காலத்துக்‌ கொடுமையைக்‌ கூறி, அதற்குள்‌ தவறாது வருக என்றதாகும்‌.

முத்தாரமும்‌ சந்தின்‌ அரமும்‌ அணிந்த பாண்டியனைக்‌ கூறியது முத்தாரமும்‌ சந்தின்‌ தொய்யிலும்‌ விளங்கும்‌ அவளுடைய மார்பகத்தையும்‌ உணர்த்தும்‌. “தென்னவன்‌ மறவன்‌” என்பதனைத்‌ தென்னவனாகிய மறவன்‌ எனவும்‌ கூட்டிப்‌ பொருள்‌ கொள்வர்‌. “பிரிந்து உறையின்‌ நோய்‌ இன்றாகச்‌ செய்பொருள்‌!” என்றது, அஃது வாய்ப்பதாகாது என்னும்‌ உட்கருத்து உடைய சொற்களாகும்‌. விளைவயலின்‌ பயனான நெற்கதிர்களைத்‌ துவளச்‌ செய்வது போலப்‌, பனிக்காலம்‌ அவளையும்‌ துவளச்‌ செய்யும்‌; நீர்ப்‌ பறவையான குருகும்‌ குளிர்‌ தாங்காது ஒலிக்குமாயின்‌ அவள்‌ புலம்பாது என்‌ செய்வாள்‌? உவமைகளை இவ்வாறெல்லாம்‌ பொருத்திக்‌ காணுக.