அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 015
களிற்றியானை நிரை
களிற்றியானை நிரை
காப்பு இகந்து போகி!
பாடியவர் : மாமூலனார்.
திணை : பாலை.
துறை : தாய் கூற்று - மகட் போக்கிய தாய் சொல்லியது.
சிறப்புற்றோன் : கோசர்களின் துளுநாடு; பாழிமலைத் தலைவனான நன்னன்.
(தன்னுடைய மகள் களவிலே கூடிவருவதை, அவளுடைய உடலினும் செயலினும் காணப்பெற்ற புதுப்புது மாற்றங்களினால் உணர்ந்தாள் தாய். அவள் மனம் பெரிதும் வருந்தியது. தன் மகளை, வீட்டைவிட்டு அயலே செல்லுதலும் கூடாதெனத் தகைந்து இற்செறித்தாள். மகளோ, தன் காதலனுடன் கலந்த அன்பினள். அதனால், எப்படியோ கட்டுக் காவல்களை எல்லாம் கடந்து, அவனுடன் வெளியேறிப் போய்விட்டாள். அப்போது, தாய் சொல்லியது இது.)
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன . . . . [05]
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
தோழிமாரும் யானும் புலம்ப,
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் . . . . [10]
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி . . . . [15]
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
குன்ற வேயின் திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!
மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன . . . . [05]
வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல
தோழி மாரும் யானும் புலம்பச்,
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் . . . . [10]
பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச்
செறிந்த காப்புஇகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய, துகள்நிலம் பரக்க,
கொன்றை யம்சினைக் குழற்பழம் கொழுதி . . . . [15]
வன்கை எண்கின் வயநிரை பரக்கும்
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்,
குன்ற வேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற - ஆறே!
பொருளுரை:
அவளுடைய தோழிமார்களும் யானும் அவளைக் காணாது புலம்புகின்றோம். முகபடாம் அணிந்த போர் யானைகளையும், ஒளிசெய்யும் அணிகளையும் உடையவன் நன்னன். அவனுடைய பாழி என்னும் ஊர் மிகுந்த கட்டுக் காவல்களை உடையது. அதைப்போன்று காவல் செறிந்து விளங்கிய, தந்தையினது பெரிய இல்லத்தின் காவலையும் கடந்து சென்று விட்டனள். அவள் காதலனான அவனோடும் உடன்போக்கிலே தானும் போய்விட்டனள்.
அருஞ்சுரத்து இருப்பையிலே ஆர்க்குக் கழன்ற புதிய பூக்கள் விளங்கும். அவ்விடத்தேயுள்ள கரடிகள், அப் புதுப் பூக்களைத் தின்னும், அங்ஙனம் தின்றவாயினவாய், அவை நிலம் புழுதி பரக்கும்படியாகச் செல்லும். சென்று கொன்றை மரத்தின் அழகிய கிளைகளிலேயுள்ள குழல் போன்ற கொன்றைப் பழங்களைக் கோதும். வலியமைந்த கைகளையுடைய அக் கரடிகளின் வலிய கூட்டம் அங்ஙனம் பரந்து செல்லுகின்ற வழியிலே அவள் சென்று விட்டனள்! குன்றத்து மூங்கிலைப் போன்ற, திரண்ட மென்மையான தோள்களையுடைய எம் அன்னை, அங்ஙனம் போய் விட்டனள்!
மெய்ம்மையான மொழிகளால் சிறப்புற்றோர், பேரணிகளை உடைய செம்மல்கள், கோசர். அவருடைய நாடு துளு நாடு, தலையிலே ஆர்க்கினையுடைய, திரண்ட பசுமையான காய்கள் முற்றிப் பழுத்த பாகற் பழங்களைத் தின்னும், பறைபோல வட்டமான கண்களையுடைய தோகைகளைக் கொண்ட மயிலினங்கள் நிறைந்திருக்கும் சோலைகளை உடையது அத் துளு நாடு. அவர்கள் செல்லும் வழியிடையிலேயுள்ள நெருங்கிய சேரிகளைக் கொண்ட தலைமைபெற்ற ஊர்கள் எல்லாம் அத் துளு நாட்டைப் போன்றே, பொருளற்று வரும் புதியவர்களைத் தாங்கிப் பேணும் பண்பினை அறிந்த மக்கள் தொகையினை உடையவாகுக! எம்முடைய மிகுதியான ஆர்வம் கைகூடுவதென்றால், அங்ஙனமே எல்லாம் ஆகுக!
சொற்பொருள்:
3. கொம்மை - பெருமை. அம் - சாரியை. குடுமி - தலையிலே ஆர்க்கு. 4. பறைக்கண் - வட்டமான கண். அறிந்த மாக்கள் - வழங்கும் பண்பினை அறிந்த மாக்கள்; முகமறிந்த மாக்கள் - என்பர். கொடையிலே மடம் பட்டவர் எனல்பற்றி “மாக்கள்” என்றனர். 19. அஞ்ஞை - அம்மை மகளை, “எம் அம்மை!” என விளிப்பது, இன்றும் தமிழ் வழக்கு அகும். பாழி - ஓர் ஊர். நகர் - மாளிகை.
விளக்கம்:
அவர் சென்றவிடங்களில் எத்தகைய துன்பமும் இல்லாது நலமுடன் இருக்க வேண்டுமென விரும்பும் தாயுள்ளம் இங்கனம் விரும்புகிறது. கோசர் வாய்மையிற் சிறந்தவர் என்பது போல வண்மையிலும் சிறந்தவர் என்பதும் இதனால் விளங்கும். நன்னனின் பாழிக் காவல் போல விழிப்புடைய காவலைக் கடந்து சென்றனள் என்பது, தலைவியின் காதல் மிகுதியையும், அவளைத் தாய் தடைசெய்ய முயன்ற முயற்சியின் அளவையும், அது பலியாமற் போனமையையும் விளக்கும்.
உள்ளுறை பொருள்:
“கரடி இருப்பைப் பூவின் இனிமையிலே செருக்குடையதாகிக் கொன்றைப் பழங்களைக் கோதிப் போனதுபோல, எம் மகளும், அவனிடம் கொண்ட தொடர்பின் இனிமைச் செருக்கினால், உடன் பழகிய தோழியரையும், பெற்று வளர்த்த எம்மையும் ஒதுக்கிப் போயினாளே!” என்பதாம்.






