அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 020

களிற்றியானை நிரை


களிற்றியானை நிரை

கொடிது அறி பெண்டிர்‌!

பாடியவர்‌ : உலோச்சனார்‌.
திணை : நெய்தல்‌.
துறை : தோழி கூற்று - பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது.

(கானற்சோலையிலே ஒரு நாள்‌, பகற்குறியிடத்தை நாடித்‌ தலைவன்‌ வந்திருக்கிறான்‌. தனக்குமுன்‌ வந்து அங்கிருக்கும்‌ தோழியும்‌ தலைவியும்‌ ஏதோ உரையாடிக்‌ கொண்டிருப்ப, அயலே சற்று ஒதுங்குகின்றான்‌. அவன்‌ வந்ததும்‌, அவன்‌ பக்கத்திலே மறைந்து நிற்பதும்‌ தோழி அறிந்தாள்‌. ஊரலரும்‌ இற்செறிப்பும்‌ ஏற்பட்டதனைத்‌ தலைவிக்குக்‌ கூறுபவள்‌ போலத்‌ தலைவனுக்கு உரைக்கின்றாள்‌. அவன்‌, விரைவிலே வந்து மணம்‌ வேட்டல்‌ வேண்டும்‌ என்பது கருத்தாகும்‌.)

பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் . . . . [05]

தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்
பல் பூங் கானல் அல்கினம் வருதல் . . . . [10]

கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர்,
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை,
எல்லையும் இரவும் என்னாது, கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி . . . . [15]

நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே.
- உலோச்சனார்.

பொருளுரை:

தோழி! கடற்கரை மணல்மேட்டிலேயுள்ள புன்னை மரத்தின்‌ இனிமையான நிழலிலே தங்கியிருப்போம்‌. கடற்‌ பரப்பினின்றும்‌ நம்‌ தந்தை கொணர்ந்து தந்த, கொழுமையான மீனின்‌ வற்றலைக்‌ கவரவரும்‌ பறவைகளை ஓட்டியிருப்போம்‌. சிவந்த நண்டின்‌ ஆழமான வளைகளைத்‌ தோண்டுவோம்‌. புலி நகக்‌ கொன்றையின்‌ உயர்ந்த கிளையிலே, கயிற்றிலே கட்டித்‌ தொங்கவிடப்பெற்ற ஊசலில்‌ அமர்ந்து அடுவோம்‌. கீழ்காற்றுக்‌ கொணர்ந்து குவித்த மணலிலே, ஆயத்தாருடன்‌ கூடிக்‌ குரவையாடுவோம்‌. இவையும்‌ வெறுத்தால்‌, வெண்மையான மேற்பரப்பினையுடைய கடல்‌ நீரிலே நம்‌ தோழியருடன்‌ கூடிக்‌ கடல்நீராடுவோம்‌. அழகிய பூக்களுடன்‌ மேவிய, பசுமையான தழை உடையினை அழகு பொருந்த உடுத்துக்‌ கொள்வோம்‌. பலகானற்‌ பூக்களையும்‌ உடைய கடற்கரைச்‌ சோலைக்கு இப்படி நாம்‌ அடிக்கடி விளையாட வருதலைப்பற்றி, இவ்வூரிலே அலர்‌ கூறுதல்‌ ஒன்றினையே அறிந்தவரான பெண்டிர்களுள்‌ சிலர்‌ கூறும்‌ சொற்களை, நம்‌ அன்னையும்‌ கேட்டனனே!

கேட்டுப்‌ பகலும்‌ இரவும்‌ என்றில்லாது, பாகன்‌ ஆராய்ந்து கொண்ட அழகிய குதிரைகள்‌ பூட்டப்பெற்று, நிலவொளி போன்ற வெண்மணலில்‌ “கல்‌” என்னும்‌ ஒலியுடனே சுழன்று வரும்‌ தேர்‌ ஒன்றும்‌ உண்டு எனவும்‌ எண்ணினளே! நம்‌ வீட்டினிடத்தே காவலையும்‌ மிகுதிப்‌ படுத்தினளே! இனி, என்‌ செய்வோம்‌? எப்படி வந்து நம்‌ காதலனைச்‌ சந்திப்போம்‌?

சொற்பொருள்:

1. அழுவம்‌ - கடற்பரப்பு. 4. செக்கர்‌ - சிவந்த. 16. கொட்கை - பரந்து திரிய விடுதல்‌ 5-6. ஞாழலொடும்‌ தாழையொடும்‌ பிணித்த ஊசல்‌ எனவும்‌ கூறுவர்‌. 11. கவ்வை நல்லணங்கு உறுதல்‌ - அலராகிய பேய்‌ பிடித்தல்‌. இப்பாடலுக்குப்‌ “பொருந்தில்‌ இளங்கீரனார்‌ பாடியது” என வேறு பாடமும்‌ உண்டு.

விளக்கம்‌:

தலைவி தலைவனோடு பகற்குறியிடத்தே சந்திப்பதை அறிந்தபோதும்‌, தோழி தாம்‌ விளையாடுவதற் கெனவே வரவும்‌, சிலர்‌ அலர்‌ உரைத்தனர்‌. அவர்‌, “கொடிது அறி பெண்டிர்‌” எனக்‌ கூறும்‌ சொல்நயம்‌ உணர்க. எனினும்‌, தலைவன்‌, தலைவியின்‌ களவுக்‌ கூட்டத்தை அவள்‌ தாய்‌ அறிந்தனள்‌ என உணர்வன்‌; உணர்ந்து, வந்து வரைந்து கொள்வன்‌ என்பதும்‌ கருத்தாகும்‌. “நல்‌ அணங்கு” என்றது, இகழ்ச்சிக்‌ குறிப்பு.