நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 258

நெய்தல்


தோழி செறிப்பு அறிவுறீஇயது.

பல் பூங் கானல் பகற்குறி மரீஇ
செல்வல் - கொண்க! - செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்,
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த . . . . [05]

கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட,
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள் . . . . [10]

நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே.
- நக்கீரர்.

பொருளுரை:

கொண்கனே! கதிர் எறித்தலானே மக்கள் முதலாயினோர் கால்கள் வெம்பும்படி கீழைத்திசைமலையிலே தோன்றிக் காய்கின்ற ஞாயிற்றினுடைய இயக்கம் பொருந்திய பகற் பொழுதிலே; செல்வம் உடைய அகன்ற நகரின் கண்ணே வருகின்ற விருந்துகளைப் பாதுகாக்கும்படி; பொன்னாலாகிய தொடியையுடைய மகளிர் சமைத்து நிவேதித்து முற்றத்திலே பலியாகப் போட்ட கொக்கினது உகிர்போன்ற சோற்றைத் தின்று; பொழுதுபடும் அளவில் அகன்ற மீன்கடையில் அசைகின்ற நிழலிலே குவித்த பசிய இறாமீனைக் கவர்ந்துண்ட பசுமையாகிய கண்ணையுடைய காக்கை; ஆங்கு வினையின்றிக் காற்றாலசைகின்ற தோணியிலே பிணித்த பாய்மரத்திற் சென்று தங்காநிற்கும் மருங்கூர்ப்பட்டினம் போன்ற இவளுடைய; நெருங்கிய அழகும் ஒளியும் பொருந்திய வளைகள் கழல்வனவற்றைக் கண்டு; அன்னை இவ் வேறுபாடு முருகு அணங்கால் ஆகியது போலுமென உட்கொண்டு, இல்லின்கண்ணே செறித்துப் புறத்தேகவிடாது காவல் செய்வாளாயினள்; ஆதலின் இவள் வருதற்கியலாமையால் இல்வயிற் செறிப்பை நினக்கு உரைசெய்யும்படி கருதிய யான் இன்று பலவாய மலர்களையுடைய கழியருகிலுள்ள சோலையிலே பகற் பொழுதின்கண்ணே குறியிடத்து வந்து போகாநின்றேன்;